மொபைல் பேமெண்ட் – தொழில்நுட்பம் அறிமுகம் – பாகம் 1

மொபைல் பேமெண்ட்

இந்தியாவில் இன்னும் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் சிறு பெட்டிக்கடைகளில் கூட கிரெடிட் கார்ட் முறையில் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. கேஷ் எடுக்காமலே காலம் தள்ள முடியும். போக, பல கடைகளில் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு உபயோகித்தால் டிஸ்கவுண்ட், பாயிண்ட்ஸ் என்று வழங்கப்படும். அதனால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்ட் வைத்திருப்பது என்பது மிகவும் சகஜம். இந்த கிரெடிட் கார்டுகளை கடைகளில் தேய்க்கும்போது பயனாளரின் பிரைவேட் டேட்டா அந்த கடைகளின் டேட்டா பேஸில் சேமிக்கப்படும். இந்த டேட்டா செண்டர்களை ஹாக்கர்கள் உடைத்து அந்த பெர்சனல் டேட்டாவைத் திருடி விற்பது என்பது ஆண்டுக்கு ஒரு முறை ஒரு சடங்காகவே நடந்து வருகிறது. சமீபத்தில் கூட ஹோம் டெப்போ நிறுவனத்தின் டேட்டா செண்டர் ஹாக் செய்யப்பட்டது.

கிரெடிட் கார்டுகளில் இருக்கும் இந்த பாதுகாப்பு சிக்கலைத் தவிர்க்க மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பத்தை கொண்டு வர பல ஆண்டுகளாக முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் ஆன்லைனில் வாங்கும்பொழுது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆன்லைன் வாலட் என்ற முறையில் பே பால் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல இ-காமர்ஸ் தளங்கள் பேபால் முறையில் பணம் செலுத்தும் முறையை அனுமதிக்கின்றனர்.

பேபால்

பயனாளர் முதலில் பேபால் தளத்தில் தனக்கென ஒரு கணக்கை துவக்க வேண்டும். தங்களது வங்கி விபரங்களையோ, அல்லது கிரெடிட் கார்ட் விவரங்களையோ உள்ளிட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஆன்லைன் ஷாப்பிங்கின்போது, பே பால் பேமெண்ட் என்பதைத் தெரிவு செய்து பேபால் கணக்கில் லாகின் செய்தால் போதுமானது. செலுத்தவேண்டிய பணத்தை பே பால் ஷாப்பிங் தளத்தின் கணக்கில் வரவு வைத்துவிடும்.

 

x-click-but6

இதனால் பயனாளருக்கு என்ன நன்மை? பயனாளர் தனது கிரெடி கார்ட் அல்லது வங்கிக்கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் உள்ளீடு செய்ய வேண்டியதில்லை. இதனால் பயனாளரின் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படுகிறது. இந்த சர்வீஸை வழங்குவதற்கு பேபால் 1.5% முதல் 2.5%வரை ஷாப்பிங் தளத்திடம் வசூல் செய்துவிடும். பயனாளர் ஒரு பைசா அதிகம் செலுத்த வேண்டியதில்லை.

இந்த ஆன்லைன் வாலட் என்பதையே மொபைல் ஃபோனில் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது பேபால். ஆன்லைனில் மட்டுமல்லாது, கடைகளில் ஷாப்பிங் செய்யும்போதும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக apps வழங்குகிறது.

‎PayPal
‎PayPal
Developer: PayPal, Inc.
Price: Free
PayPal
PayPal
Developer: PayPal Mobile
Price: Free

பயனாளர் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி பணம் செலுத்தும் இடத்துக்கு வந்ததும் பேபால் முறையில் பணம் செலுத்தப்போகிறேன் என்று கேஷியரிடம் சொல்லிவிட்டு, மொபைல் ஃபோனில் உள்ள ஆப்-இல் லாகின் செய்து, பேமெண்ட் செய்தால் உங்கள் செல்ஃபோனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு கோட் அனுப்பும். அந்த கோடை கேஷியரிடம் கொடுத்தால் முடிந்தது.

இந்த முறையில் இருக்கும் பிரச்சனைகள் அல்லது சிரமங்கள் என்ன என்று பார்த்தால், நீங்கள் உங்கள் செல்ஃபோனை அன்லாக் செய்து, பேபால் ஆப்க்கு சென்று லாகின் செய்திருக்கவில்லை என்றால் லாகின் செய்து, எஸ்.எம்.எஸ் வரும் வரை காத்திருந்து, அந்த பின் நம்பரை கேஷியரிடம் தந்து அவர் அந்த பின்னை சிஸ்டமில் சேர்த்து, பேமெண்ட் அப்ரூவ்ட் என்று வர நேரமாகும். அதை விட கிரெடிட் கார்டை பர்ஸிலிருந்து எடுத்து தேத்ய்த்துவிட்டுப் போவது சுலபம்.

இன்னொன்று எஸ்.எம்.எஸ் வரவும், லாகின் செய்யவும், நெட்வொர்க் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நெட்வொர்க் இல்லாத அல்லது வீக்காக இருக்கும் இடங்களில் இந்த முறை செயல்படாது. அப்போது கிரெடி கார்டை உபயோகிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பயனாளர் உள்ளாகிறார்.

இந்த மொபைல் பேமெண்ட் அல்லது மொபைல் வாலட் என்ற தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டியது என்.எஃப்.சி என்ற தொடர்பு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டபிறகுதான்.

NFC – Near Field Communication

nfc

இது ஒரு குறைந்த-வரம்பு கம்பியில்லாத் தொடர்பு நெறிமுறை. இந்த வகை தொடர்பில் ஆண்டெனாவானது, செல்ஃபோன் ஆண்டனாவை விட சிறியதாக இருக்கும். அதனால் இது வெளிப்படுத்தும் அலையின் wavelength செல்ஃபோன் நிறுவனங்கள் உபயோகப்படுத்தும் அலைவரிசையின் wavelengthஐ விட சிறியதாக இருக்கும். இதனால் என்.எஃப்.சியின் செயல்பாடுகள் செல்ஃபோன் தொடர்பை பாதிக்காது.

இதன் வரம்பு மிகவும் குறைவானதாக இருப்பதால், ஒரு சாதனம் இன்னொரு சாதனத்துக்கு மிக அருகில், கிட்டத்தட்ட இடித்துக்கொள்ளும் தூரத்தில் இருந்தால் தான் ஒன்றொடொன்று தொடர்பு கொள்ள முடியும்.

இந்த கம்பியில்லாத் தொடர்புக்கான முஸ்தீபுகள் 2004ம் ஆண்டிலேயே நோக்கியா, ஃபிலிப்ஸ், சோனி நிறுவங்கள் மூலம் துவங்கப்பட்டுவிட்டன. 2006ம் ஆண்டில் நோக்கியா 6131 என்ற முதல் என்.எஃப்.சி செல்ஃபோனும் வெளியாகிவிட்டது. 2010ம் ஆண்டில் Nice என்ற ஃப்ரான்ஸ் நாட்டின் நகரில் என்.எஃப்.சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து, சுற்றுலா, மாணவர் சேவை போன்ற வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டன.

நிற்க. இந்த வசதி ஆன்ராய்ட் ஃபோன்களில் முதலில் 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. Android Beam என்றழைக்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது (Ice Cream Sandwitch). ஆண்ட்ராய்ட் பீம் என்பது இரண்டு ஆன்றாய்ட் – என்.எஃப்.சி தொழில்நுட்பம் நிறுவப்பட்ட – ஃபோன்கள் அருகருகில் வைக்கப்படும் போது, இரண்டும் தொடர்பு கொண்டு ப்ளூடூத் தொடர்புக்கான பாஸ் கோடுகளை பகிர்ந்து கொண்டு, ப்ளூடூத் தொடர்பை நிறுவிக்கொள்ளும். பின்னர் புகைப்படங்களோ, வீடியோவோ, அல்லது உரலியோ இரண்டு ஃபோன்களுக்கும் நடுவில் ப்ளூடூத் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும்.

அது ஏன் ப்ளூடூத்? என்.எஃப்.சியிலேயே அனுப்பக்கூடாதா? முடியாது. ஏன் என்றால் என்.எஃப்.சியில் தொடர்பு அதிகப்பட்ச வேகம் 424 கிலோ பிட்/நொடி. அதே சமயம் ப்ளூடூத் குறைந்த பட்ச வேகம் 2.1 மெகாபிட்ஸ்/நொடி.

அப்படியென்றால் நேரடியாக ப்ளூ டூத் தொடர்பையே ஏற்படுத்திக்கொள்ளலாமே? என்.எஃப்.சியினால் என்ன நன்மை? ப்ளூ டூத் தொடர்பை ஏற்படுத்த இரண்டு சாதனங்களும் ஒரு பின் நம்பரை பரிமாறிக்கொள்ளவேண்டும். தொடர்பு ஏற்படாத பட்சத்தில் அந்த பகிரலை பயனாளர் கைப்பட செய்ய வேண்டும். இதனால் இரண்டு சாதனங்களுக்கும் தொடர்பு ஏற்பட சில நிமிடங்கள் ஆகலாம். ஆனால் என்.எஃப்.சி தொழில்நுட்பம் மூலம் இரண்டு சாதனங்களும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அதிக பட்சமாக ஒரு நொடியில் 1/10 அளவே காலம் தேவைப்படும். அதோடு human interactionம் குறைவு.

சேம்சங்க் இந்த ஆண்ட்ராயிட் பீமை கொஞ்சம் மாற்றி எஸ்-பீம் என்று ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதில் என்.எஃப்.சியில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சாதனங்கள் ப்ளூடூத் தொடர்புக்கு பதிலாக WiFi Direct என்ற தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும். இது ப்ளூடூத்தை விட பலமடங்கு வேகம் இருப்பதால் ஃபைல் ஷேரிங் இன்னும் சீக்கிரமாக முடிந்துவிடும்.

இந்த என்.எஃப்.சியை எப்படி மொபைல் பேமெண்ட்டில் உபயோகிக்கிறார்கள் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

Comments

comments