மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3

ISIS or SoftCard

ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகிக்கொண்டே வந்தாலும், என்.எஃப்.சி தொழில்நுட்பத்தை 2012ம் ஆண்டிலேயே அறிமுகப் படுத்தியும், அதற்கு பயனாளர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம், வெரைசான், ஏ.டி&டி, டி-மொபைல் இந்த மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் இணைந்து 2011ம் ஆண்டில் திட்டமிட்டு 2013ம் ஆண்டில் கொண்டு வந்த ISIS (இப்போது Softcard) என்றழைக்கப்படும் மொபைல் வாலட் தான்.

டிஸ்கவர் கிரெடிட் கார்ட் நிறுவனத்துடன் இணைந்து பார்க்லேகார்ட் நிறுவனம் வழங்கும் கிரெடிட்கார்டுக்கு மட்டுமான பேமெண்ட் சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற கிரெடிட் கார்டுகளையும் அனுமதித்தது ISIS. தங்களது மொபைல் வாலட்டை முன்னிலைப்படுத்த வெரைசான் நிறுவனம் கூகுள் வாலட்டை தங்கள் நெட்வொர்க் ஃபோன்களில் முடக்கியது. கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அதை நீக்கியது.

2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல் வாலட்டும் கூகுள் வாலட்டைப் போன்றே பெரிதும் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இறுதியில் இந்த ஆண்டு ஃபிப்ரவரியில் கூகுள் இந்த நிறுவனத்தை வாங்கி சாஃப்ட்கார்ட் சர்வீஸை இழுத்து மூடியது. SoftCard-இன் அம்சங்களை கூகுள் வாலட்டுடன் உள்ளடக்கி AndroidPay என்ற புதிய ஆப்-ஐ 2015 கூகுள் ஐ/ஓ நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இன்னமும் மார்க்கெட்டுக்கு வராத இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி இப்போது பேச முடியாது.

TouchID

என்.எஃப்.சி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், போட்டியாளரான ஆண்ட்ராய்ட் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டு ஆனபின்னும் ஆப்பிள் அமைதியாக இருந்து வந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 2012ம் ஆண்டு Authentec என்ற நிறுவனத்தை ஆப்பிள் 356 மில்லியன் கொடுத்து வாங்கியது. அந்த நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பம் கைரேகை அடையாளம் காணுதல்.

அந்த நிறுவனத்தை வாங்கி சரியாக ஒரு வருடத்தில் ஆப்பிளின் அந்த வருட ஃபோனான ஐஃபோன் 5Sல் ஃபிங்கர்ப்ரிண்ட் ரீடர் ஒன்றை நிறுவியது. பின் கோட் அடித்து ஃபோனைத் திறப்பதற்கு மாற்றாக பயனாளர் தனது விரலை தேய்ப்பதன் மூலம் திறக்க வழி செய்தது. இந்த ஃபிங்கர் பிரிண்ட் தகவலானது ஐஃபோனின் சிப்பிலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கப்படும். ஆப்பிளின் சர்வருக்கு அனுப்பி வைக்கப்படாது. அதனால் நெட்வொர்க் இருக்கிறதோ இல்லையே ஃபோனைத் திறக்க முடியும்.

ஆப்பிள்-பே

TouchIDயின் வெற்றிக்குப் பிறகு ஐஃபோன் 6ல் ApplePayஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதற்கென்று தனியாக எந்த ஆப்-ஐயும் சேர்க்காமல், ஏற்கனவே இருந்த பாஸ்புக் என்ற ஆப்-இல் இதை இண்டக்ரேட் செய்திருந்தது. (பாஸ்புக் என்பது லாயல்டி கார்ட், போர்டிங் பாஸ் போன்றவற்றை சேமித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ள உதவும் ஒரு ஆப்).

பயனாளர் தனது கிரெடிட் கார்ட் தகவலை பாஸ்புக்கில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கடையில் பணம் செலுத்தும் இடத்தில் கிரெட் கார்ட் தேய்க்கும் பொறிமீது போனை வைத்ததும் நாம் சேமித்து வைத்திருக்கும் கிரெடிட் கார்ட்களைக் காட்டும். எந்த கிரெடிட் கார்ட் தேய்க்க விரும்புகிறோமோ அதைத் தெரிவு செய்து ஃபிங்கர் பிரிண்ட் ரீடரில் நம் விரலைத் தேய்த்தால் போதும். செல்ஃபோனில் இருந்து நமது தகவல் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். பின்னர் கையொப்பம் இட வேண்டியிருந்தால் கையெழுத்துப் போடவேண்டும்.

பேபால் போலவோ இல்லை கூகுள் வாலட் போலவோ இல்லாமல், ஆப்பிள் புதிய மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பத்தையே அறிமுகப்படுத்தியது எனலாம். 2014 அக்டோபரில் மார்க்கெட்டுக்கு வந்தாலும், இதற்கான வேலையை 2013ம் ஆண்டிலேயே துவங்கி விட்டது ஆப்பிள். விசா, மாஸ்டர்கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்த மூன்று நிறுவனங்களோடும் இணைந்து கிரெடிட் கார்ட் தகவலுக்கு பதிலாக என்க்ரிப்டட் டோக்கனை பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதன் பின்னர் வங்கிகளோடு ஒப்பந்தம் போட்டு இந்த முறையை அங்கீகரிக்கவும் வைத்தது. இதனால் விசா/மாஸ்டர்கார்ட்/அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டாக இருந்தாலும் அந்த அட்டையை வழங்கும் வங்கி ஆப்பிளோடு ஒப்பந்தம் போட்டு இந்த புதிய முறை பேமெண்ட்டை அங்கீகரிப்பவர்களாக இருந்தால் மட்டுமே அந்தக் கார்டை உங்கள் பாஸ்புக்கில் இணைக்க முடியும். உதாரணத்திற்கு, என்னிடம் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா கடன் அட்டைகள் (விசா) இருக்கின்றன. இவை இரண்டையும் என்னால் பாஸ்புக்கில் உள்ளிட முடிந்தது. ஆனால் எனது கார்ப்பொரேட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டை உள்ளிட முடியவில்லை. தொடர்ந்து வங்கிகள் இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுக்கொண்டே வருகின்றன.

இந்த முறையில் உங்கள் கடன் அட்டையை நீங்கள் உள்ளிடும் போது, வங்கியானது ஒரு டம்மி கிரெடிட் கார்ட் எண்ணை உங்கள் ஐஃபோனுக்கு ஒதுக்கீடு செய்கிறது. நீங்கள் கடையில் ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்தும்போது அந்த புது எண்தான் பகிரப் படுகிறது. அந்த கிரெடிட் கார்ட் எண் ஹேக்கர்கள் கையில் கிடைத்தாலும் அதை உபயோகிக்க முடியாது. ஏனென்றால் அது அந்த ஐஃபோனில் இருந்து வந்தால் மட்டும் தான் வங்கி அதை அங்கீகரிக்கும். மேலும் ஃபிங்கர் பிரிண்ட் பாதுகாப்பும் இருப்பதால் உங்கள் ஃபோன் வேறு ஒருவரின் கையில் சிக்கினால் கூட அன்லாக்கே ஆகியிருந்தாலும் அந்த நபரால் உள்ளிடப்பட்டிருக்கும் கிரெடி கார்ட்களை உபயோகிக்க முடியாது.

மேலும் நாம் எங்கு ஆப்பிள் பே-ஐ உபயோகிக்கிறோமோ அந்த நிறுவனத்தின் பரிவர்த்தனையாகவே பதிவாவதால் ரிவார்ட் புள்ளிகள் கிடைப்பதில் எந்த தடையும் இல்லை. இதனால் பயனாளர்களுக்கு நன்மை. உபயோகப்படுத்துவதும் மிக எளிது. ஃபோனை ஆன் செய்ய வேண்டியதில்லை. லேசாகத் தட்டியதும் கிரெடிட் கார்டை காட்டும். நம் விரலை டச் ஐடி ரீடரில் தடவினால் போதும் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும். இது வரை 100 முறைக்கு மேல் ஆப்பிள்பே-ஐ உபயோகப்படுத்தியிருப்பேன். ஒரே ஒரு முறை மட்டுமே வேலை செய்யாமல் போனது.

ஆப்பிள் பே அறிமுகப்படுத்திய பின்னர் அமெரிக்காவில் தொடுதலில்லா பரிவர்த்தனைகளில் $3ல் $2 ஆப்பிள் பே மூலம் தான் செலவிடப்படுகிறதாம். 66% மார்க்கெட். தொடுதலில்லா பரிவர்த்தனைகளும் கூடியிருப்பதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை தொகையில் 0.15%  ஆப்பிளுக்குக் கமிஷனாக செல்கிறது. வங்கிகளும் எங்கே கார்ட் செலவிடப்படுகிறது என்ற டேட்டா கிடைப்பதால் ஆப்பிளுக்கு 0.15% தருவதைப் பெரிதாகக் கருதவில்லை.

ஆப்பிள் பே-இல் இருக்கும் இன்னொரு செக்யூரிட்டி, நம் பரிவர்த்தனைகள் செல்ஃபோனில் மட்டுமே தற்காலிகமாக சேமித்து வைக்கப்படும். எந்த ஆப்பிள் செர்வரிலும் அந்த தகவல்கள் சேமித்து வைக்கப்படுவதில்லை. கூகுள் வாலட் மற்றும் பே-பாலில் இந்த வாக்குறுதி இல்லை. உண்மையில் கூகுள் இந்தத் தகவலை வைத்துத்தான் சம்பாதிக்கிறது. கூகுள் வாலட் இலவசம் என்றாலும் நீங்கள் எங்கே எவ்வளவு செலவளிக்கிறீர்கள் என்ற தகவல் தான் அதற்கு நீங்கள் கொடுக்கும் கட்டணம். இதன் மூலம் நீங்கள் அதிகம் செலவு செய்யும் விசயங்களுக்கான விளம்பரத்தை உங்களுக்கு காட்டுவதன்/அனுப்பி வைப்பதன் மூலம் சம்பாதிக்கிறது கூகுள். ஆப்பிள் அந்த வருமானத்தை வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது.

ஆப்பிள் இந்த ஆப்பிள்பே APIஐ தனது தளங்களுக்கு ஆப் டெவலப் செய்யும் டெவலப்பர்களுக்கும் திறந்து விட்டிருக்கிறது. இதன் மூலம் in-app payment என்னும் வசதிக்கும் ஆப்பிள் பே-ஐயே உபயோகிக்க டெவலப்பர்களுக்கு ஏதுவாகிவிட்டிருக்கிறது.

இதுநாள் வரை புழக்கத்தில் இருக்கும் மொபைல் பேமெண்ட் வசதிகளில் உபயோகிக்க எளிதானதும் பாதுகாப்பானதும் ஆப்பிள்பே மட்டுமே.

CurrentC

கிரெடிட் கார்டை நாம் ஒரு கடையில் உபயோகிக்கும்போது நாம் செலுத்திய தொகையில் 2% முதல் 5% வரை வங்கிகளுக்கு கமிஷனாகப் போகிறது. அதாவது நாம் ரூ.100க்கு ஏதாவது பொருள் வாங்கினோம் என்றால் அதில் ரூ.98 தான் கடைக்காரருக்குப் போகிறது. மீதி ரூ.2 வங்கிக்குப் போகிறது. அதனால் தான் சிலகடைகளில் குறைந்தபட்சம் இவ்வளவுக்கு வாங்கினால் தான் கிரெடிட் கார்ட் உபயோகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.

இந்த 2% முதல் 5% வரை வங்கிக்கு எதற்கு நினைத்த விற்பனை செயின் நிறுவனங்கள் பல அவர்களே கிரெடிட் கார்ட் / சார்ஜ் கார்ட் சேவையை தங்கள் வாடிக்கையாளருக்கு அளிக்கிறார்கள். அந்த அட்டைகளை அவர்களது கடையில் மட்டுமே உபயோகிக்க முடியும். உதாரணத்திற்கு மேஸிஸ் (Macy’s) நிறுவனம் வழங்கிய அட்டையை மேஸிஸ் கடையில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த முடியும். இந்த நிறுவனங்களும் தங்களது சார்ஜ் கார்டை வாடிக்கையாளர்களை உபயோகிக்க வைக்க கூடுதல் தள்ளுபடி வழங்குகின்றர். மேஸிஸ் அட்டையில் பணம் செலுத்தினால் கூடுதலாம் 20% தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.

மொபைல் பேமெண்ட் வரவேற்பைப் பெற்றதும், வால்மார்ட், டார்கெட், பெஸ்ட் பை, சிவிஎஸ், சியர்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து MCX என்ற நிறுவனத்தை உருவாக்கினர். வால்மார்ட் பேடியெண்ட் என்ற சிறு நிறுவனத்தை வாங்கி அதனை கரண்ட்-சி என்ற மொபைல் பேமெண்ட் ஆப்-ஐ உருவாக்கப் பணித்தனர்.

இந்த ஆப்-இல் உங்களது Shop Charge Card அல்லது கிஃப்ட் கார்டை உள்ளிட்டுக் கொள்ளலாம். பணம் செலுத்தும் இடத்தில் உங்கள் ஆப்-ஐத் திறந்து பின்கோடு அடித்து செலுத்த விரும்பும் கிரெடி கார்டை தெரிவு செய்ததும், அந்த ஆப் ஒரு QR code உருவாக்கித் தரும். அந்த QR code-ஐ கடை சிப்பந்தியிடம் காட்டினால் அவர் அதை ஸ்கேன் செய்துகொள்வார். அந்த QR Code’ல் கிரெடிட் கார்ட் தகவல் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பரிமாற்றம் செய்யப்படும். பின்னர் அந்த நிறுவனம் அந்த கிரெடிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்.

பெஸ்ட் பை, வால்மார்ட் ஆகிய நிறுவங்கள் ஆப்பிள்-பே வகை பணம் செலுத்தும் வசதியை தங்கள் கடைகளில் செயலிழக்கச் செய்யப் போவதாக அறிவித்தனர். அதன்படியே செயலிழக்கவும் செய்தனர். சிவிஎஸ் ரைட் எய்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியே சொல்லாமல் கமுக்கமாக ஆப்பிள்பே வசதியை துண்டித்தன.

எதிர்பார்த்த அளவுக்கு கரெண்ட்-சி பிக் அப் ஆகாததால் இப்போது பெஸ்ட் பை தனது கடைகளில் ஆப்பிள் பே முறை அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Comments

comments