மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2

தொடுதலில்லா பரிவர்த்தனை (Contactless payment)

மனிதனின் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கத்தான் எத்தனை வசதிகளைக் கண்டுபிடிக்கிறான்? ஆரம்பத்தில் கரென்சி மூலம் பணம் செலுத்தி வந்தவன், பணத்தை எண்ணிக் கொடுத்து சரியான சில்லரையை வாங்க சிரமமாக இருக்கிறது என்று காசோலையைக் கொண்டுவந்தான். காசோலையை நிரப்பி, கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவேண்டும். அதிலும் ஏதாவது தவறு செய்துவிட்டால் காசோலை திரும்பி வருவது அதற்கொரு தண்டத்தொகை என்று கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று கிரெடிட் கார்டு டெபிட் கார்டை கண்டுபிடித்தான்.

கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ கடைக்காரரிடம் கொடுத்து, அவர் அதை மெஷினில் தேய்த்து பின்னர் ரசீதைத் துப்பும் வரை காத்திருந்து அதில் கையெழுத்தும் போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதால் வாடிக்கையாளரே தேய்க்கும் வண்ணம் பொறிகளை நிறுவினார்கள்.

அதிலும் ஒரு முறைக்கு இருமுறை தேய்க்க வேண்டியிருக்கிறது, பின்னர் தொடுதிரையில் கையெழுத்தை வரைய வேண்டியிருக்கிறது என்பதால் குறைந்தது இவ்வளவு தொகைக்கு மேல் இருந்தால் மட்டும் கையொப்பம் கேட்டால் போதும் என்று கொண்டுவந்தார்கள்.

இந்த வசதியை அறிமுகப் படுத்தியதும் வங்கிகளுக்கு அடுத்ததாகத் தோன்றியதுதான் தொடுதலில்லா பணம் செலுத்தும் வசதி. கிரெடிட் கார்டில் ஒரு RFID சிப்பை வைத்து கிரெடிட் கார்டு தேய்க்கும் பொறியில் அந்த சிப்போடு கிரெடிட் கார்ட் தகவலைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியை வைத்தான். இதனால் கையெழுத்துப் போடத் தேவையில்லாத வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு (அமெரிக்க அளவு $25) இந்த முறையில் பணம் செலுத்த ஆரம்பித்தார்கள். இந்த வசதியின் மூலம் சிறிய தொகைகளுக்கு நோட்டுகள் மூலம் செய்யப்பட்டு வந்த பரிவர்த்தனைகள் இப்போது இந்த முறையில் செய்ய ஆரம்பித்தன. இந்த வகைப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியபின் இதன் பயன்பாடு 25% அதிகமானதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

இந்த முறையை முதலில் அறிமுகப்படுத்தியது யாரென்று பார்த்தால் பேங்க் ஆஃப் அமெரிக்கா. மெக்டொனால்ட் நிறுவனத்துடன் இணைந்து FreedomPay என்ற பெயரில் இந்த சேவையை அறிமுகப்படுத்தியது. பின்னர் விசா, மாஸ்டர் கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்த மூன்று பெரிய கிரெடிட் கார்ட் சேவை நிறுவனங்களும் வகையே PayWave, ExpressPay, PayPass என்ற contactless payment சேவைகளை ஆரம்பித்தன. இதன் காரணமாக வியாபார நிறுவனங்கள் பலவும் தங்களது பழைய கிரெடிட் கார்ட் தேய்க்கும் பொறிகளுக்கு மாற்றாக புதிய பொறிகள் – Contactless Payment enabled – நிறுவ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். (Tip: Verifone என்ற நிறுவனத்தின் பொறிகள் தான் இப்போது பல இடங்களில் உபயோகிக்கப் படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் என்றால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.)

இப்படி ஆரம்பித்த தொடுதலில்லா பரிவர்த்தனை, இன்று மொபைல் ஃபோனில் வந்து நிற்பதற்கு கூகுள் ஒரு முக்கியமான காரணம்.

கூகுள் வாலட்.

கூகுள் வாலட் என்ற பணப்பட்டுவாடா சேவையை கூகுள் நிறுவனம் பேபால் சேவைக்குப் போட்டியாகத்தான் ஆரம்பித்தது கூகுள் செக்கவுட் என்ற பெயரில். தொடக்கத்தில் இணையப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே உபயோகப்பட்டு வந்த இந்த வசதி என்.எஃப்.சி வசதி மொபைல் ஃபோன்களுக்கு வந்த பின்பு மொபைல் பேமெண்ட் சேவையாக மாற்றப்பட்டது.

கூகுள் செக்கவுட் சேவையை 2006ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய கூகுள் இலவச சேவையாக 2008ம் ஆண்டு வரை வைத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படி இலவசமாக வழங்கியதன் நோக்கம் நுகர்வோர் மையத்தை அதிகப்படுத்தவும் பேபால் சேவையை அழிக்கவும் தான். ஆனால் பேபால் நிறுவனத்தை ஈபே காப்பாற்றியது. அதன் தளத்தில் கூகுள் செக்கவுட் முறையை தடை செய்தது. 2011 முதல் பேபால் தவிர வேறு எந்த முறையிலும் பணம் செலுத்த முடியாமல் செய்துவிட்டது ஈபே.

2008க்குப் பிறகு கூகுள் செக்கவுட் தனது சேவைக்கு நிறுவனங்களிடம் 1.4% முதல் 2.0% வரை சேவைக் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது. 2013ம் ஆண்டிலிருந்து கூகுள் செக்கவுட் சேவை நிறுத்தப்பட்டு கூகுள் வாலட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது கூகுள் வாலட் மூலம் நீங்கள் இன்னொருவருக்குப் பணம் அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. ஜிமெயில் மூலமாகவே உங்கள் கூகுள் வாலட்டிலிருந்து இன்னொருவருடைய கூகுள் வாலட்டுக்குப் பணம் அனுப்பலாம்.

மொபைல் ஃபோனில் கூகுள் வாலட்:

Google Pay
Google Pay
Developer: Google LLC
Price: Free

கூகுள் வாலட் என்பது ஒரு App. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன்களில் இந்த ஆப்-ஐ நிறுவிக்கொள்ளலாம். ஐஃபோனின் ஆப்-இல் Contactless Payment வசதி இல்லை. பணம் அனுப்பும் வசதி மட்டுமே உள்ளது.

ஆன்ட்ராய்ட் கூகுள் வாலட் ஆப்-இல் உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கூகுள் வாலட் ஒரு அக்கவுண்ட் எண்ணை (BankCorp Bank உடன்பாட்டுடன்) வழங்கும். அது ஒரு கிரெடிட் கார்ட் எண்ணாக இருக்கும். கூடுதல் பாதுகாப்பாக ஒரு 4 டிஜிட் பாஸ்கோட் ஒன்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். பணம் செலுத்த வேண்டிய இடம் வந்ததும், உங்கள் ஃபோனை ஆன் செய்து, அன்லாக் செய்து, கூகுள் வாலட் ஆப்-க்குப் போய் 4 டிஜிட் பாஸ்கோட் அடித்து அன்லாக் செய்து கொண்டு, கிரெடிட் கார்ட் தேய்க்கும் பொறி மீது உங்கள் ஃபோனை லேசாகத் தட்டினால் (தட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை அருகில் வைத்தாலே போதும்) உங்கள் கூகுள் வாலட் அக்கவுண்ட் தகவல் அந்தப் பொறிக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் தேவைப்பட்டால் கையெழுத்து இடுவது மட்டுமே வேலை. 24 மணி நேரத்துக்கு ஒரு முறை பின்கோடை உள்ளிட்டால் போதும் என்ற செட்டிங்கும் உள்ளது. இதனால் ஒவ்வொருமுறை ஆப்-ஐத் திறந்து பின்கோட் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூகுள் வழங்கும் கூடுதல் பாதுகாப்பு என்ன?

  1. Physical Credit Card தேவையில்லை. அதனால் தொலைந்து போய் வேறொருவரால் உபயோகிக்கப்படும் வாய்ப்பு இல்லை.

  2. என்.எஃப்.சி சிப் ஆக்டிவேட் ஆகவேண்டுமென்றால் செல்ஃபோனில் ஸ்க்ரீன் ஆன் செய்யப்பட வேண்டும் (அன்லாக் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை)

  3. உங்கள் ஃபோன் தொலைந்தால் கூட 4 டிஜிட் பின்கோடு தெரியாமல் கூகுள் வாலட்டைத் திறக்க முடியாது.

  4. உங்கள் ஃபோனையும் லாக் செய்து வைத்துக் கொண்டால் கூடுதல் பாதுகாப்பு.

கிரெடிட் கார்ட் தகவலை ஆன்றாய்ட் என்க்ரிப்ட் செய்து வைத்துக்கொள்ளும். அதனால் உங்கள் ஃபோன் திருடுபோனால் கூட உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

பேபால் ஆப்-ஐ விட என்ன கூடுதல் வசதி இதில்:

பேபால் ஆப்-இன் மூலம் நீங்கள் பணம் செலுத்தும் போது அந்த பரிவர்த்தனையானது உங்கள் கிரெடிட் கார்டில் பேபால் பரிவர்த்தனையாகத்தான் பதிவாகும். சில கிரெடிட் கார்ட்கள் ரிவார்ட் புள்ளிகள், உங்கள் பயன்பாட்டுக்கேற்ப – வழங்கும். அந்தப் புள்ளிகளை பணமாகவோ (1% Cashback) அல்லது பிரயாணத்துக்கோ உபயோகித்துக் கொள்ளலாம். இன்னும் சில கிரெடிட் கார்டுகள் பலசரக்கு வாங்கினால் 2%, உணவகங்களில் செலவு செய்தால் 5%, பெட்ரோல் பங்குகளில் 5% என்று புள்ளிகள் தரும். இவை எல்லாமே பேபால் பரிவர்த்தனைகளாகப் போகும்பட்சத்தில் நீங்கள் இந்தக் கூடுதல் ரிவார்டை இழப்பீர்கள் (எவ்வளவு வரப் போகிறது என்று நினைக்கலாம், சராசரியாக ஒரு வீட்டில் மாதம் ஒன்றுக்கு ஒரு கிரெடிட் கார்டில் $890 வரை செலவு செய்கிறார்கள். சராசரியாக ஒரு குடும்பம் 4 கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கின்றன.ந நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்).

தவறான தகவலை அளித்ததற்கு மன்னிக்கவும். கூகுள் வாலட்டும் பே பால் ஆப்-ஐப் போலவே செயல்படும். கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்டில் நீங்கள் செய்த பரிவர்த்தனைகள் கூகுள் வாலட் என்றே தெரியும். அதனால் ரிவார்ட்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. கூகுள் வாலட் பரிவர்த்தனைகளுக்கு உங்கள் வங்கி (இது வரை எந்த வங்கியும் தருவதில்லை) தருமானால் அந்த ரிவார்ட் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேபால் முறை பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் இடங்களில் மட்டுமே பேபாலை உபயோகப்படுத்தமுடியும் (வால்மார்ட்). ஆனால் கூகுள் வாலட் Contactless Payment ஏற்றுக்கொள்ளும் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தலாம்.

கூகுள் வாலட்டில் என்ன குறைகள்?

  1. நேரம். தொடுதலில்லா பரிவர்த்தனைகளில் முதன்மையானது நேரம். வாலட்டிலிருந்து கிரெடிட் கார்டை எடுத்துத் தேய்க்கும் நேரத்தை விட குறைவான நேரம் செலவானால் தான் பயனாளர்கள் அதிகம் உபயோகிப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது இரண்டாவது பட்சம் தான். இங்கே 24 மணி நேரத்துக்கு ஒரு முறை பின் அடிக்க வேண்டியிருப்பதால் அது நேரமெடுக்கும்.

  2. பின் அடிக்க வேண்டியிருக்கும்போது நெட்வொர்க் தேவைப்படுகிறது. நெட்வொர்க் இல்லாத, வீக்காக இருக்கும் இடங்களில் அன்லாக் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

  3. என்னதான் செக்யூரிட்டி இருந்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதனால் கூகுள் வாலட்டில் வைக்கும் உங்கள் கிரெடிட் கார்ட் தகவல் 100% பாதுகாப்பானது இல்லை.

  4. கிரெடிட் கார்ட் தகவல் உங்கள் ஃபோனில் இருந்து நீங்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. அந்தத் தகவல் அந்த நிறுவனத்தில் செர்வர்களில் சேமித்து வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த மாதிரி நிறுவனங்கள் சிலவற்றின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்டு நுகர்வோரின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன (டார்கெட்). கூகுள் வாலட் மூலம் இந்த மாதிரி நிகழ்வுகளைத் தடுக்க இயலாது. (கிரெடிட் கார்ட் தகவல்கள் கூகுள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன. கூகுள் வாலட் மூலம் பணம் செலுத்தும்போது உங்கள் கூகுள் வாலட் அக்கவுண்ட் எண் நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்யப்படும். இது வரை இந்தத் தகவல் திருடப்பட்டு வேறு எங்கும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை.

கூகுள் வாலட்டில் இருக்கும் குறைகளை ஆப்பிள் பே எப்படிக் களைகிறது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Comments

comments